Thursday, September 30, 2010

தியானம்


* இரவு பகலாகும் போது உள்ள நேரம் மிகப்பெரிய ஆற்றல் உள்ள நேரம். அந்த நேரங்களில் தான் தியானம் மிகவும் எளிதாகக் கை கூடிகிறது.

* தியானம் ஆழப்படப்பட உறக்கம் ஆழ்ந்து ஏற்படுகிறது.

* முயற்சியுடன் தியானம் செய்ய ஆரம்பித்தால் அந்த முயற்சியே ஆழமாகச் செல்வதைத் தடுத்துவிடும். ஆனால் தியானத்தின் சுவையை உணர்ந்து விட்டால் உறக்கமே தியானத்தின் திசைநோக்கி மெல்ல நகர ஆரம்பித்து விடும்.

* தியானம் மரணத்திற்கு ஒப்பானது. தியானம் ஒரு பக்கம் நம் இருப்பை உணரச்செய்கிறது. மறுபக்கம் நம் ஆணவத்தை கொன்று விடுகிறது.

* தியானம் ஆழமடைந்து விட்டதற்கான அடையாளம் ஆனந்தம். தியானம் ஆழ்ந்து செல்லச் செல்ல மகிழ்ச்சி ஆழமடையும் என்பது தர்க்கரீதியான உண்மை.


தியானத்தின் பயன்கள்

1. மனிதன் தன்னிடத்திலே உண்மையான வலிமையை வல்லமையை தேக்கி வைத்துக் கொள்ள உதவும் சாதனமாகவே தியானம் திகழ்கின்றது.

2.வாழ்க்கையில் ஏற்படுகின்ற தோல்விகளை, குழப்பங்களைச் சக்தியிழக்க செய்து சுலபமாக முன்னேற்றபாதை அமைத்து தருகின்றது தியானம்.

3.வாழ்க்கையில் எந்தத் துறையில் நாம் தொடர்பு கொண்டிருந்தாலும் அந்தத் துறையி ஆழ்ந்த பிடிப்பும், அக்கறையும், முழு மன ஈடுபாடும் கொண்டிருந்தால் படிப்படியான உயர்வினை கொடுப்பது தியானம்.
ஆதலினால் தியானிப்போம்.

Wednesday, September 29, 2010

சிந்தனைகள்மிக மிக நல்ல நாள் -- இன்று

மிகப் பெரிய வெகுமதி -- மன்னிப்பு

மிகவும் வேண்டாதது -- வெறுப்பு

மிகப் பெரிய தேவை -- சமயோசித புத்தி

மிகக் கொடிய நோய் -- பேராசை

மிகவும் சுலபமானது -- குற்றம் காணல்

கீழ்த்தரமான விஷயம் -- பொறாமை

நம்பக்கூடாதது -- வதந்தி

ஆபத்தை விளைவிப்பது -- அதிகப்பேச்சு

செய்ய வேண்டியது -- உதவி

விலக்க வேண்டியது -- விவாதம்

உயர்வுக்கு வழி -- உழைப்பு

நழுவ விடக் கூடாதது -- வாய்ப்பு

Tuesday, September 28, 2010

கொடுங்கள் --> கொடுக்கப்படும்


“அடுத்தவர்களுக்கு தானம் கொடுக்கும் அளவுக்கு ஆண்டவன் என்னை வைக்கவில்லை?” என்று நீங்கள் கருதினால்,குறைந்தபட்சம் உங்கள் உடல் உழைப்பையாவது அடுத்தவர்களுக்கு தானாமாக கொடுங்கள்.

ஒரு விஷயத்தை நினைவில் நிறுத்திக் கொள்ளுங்கள். யாரோ போட்ட சாலையில் தான் நாம் வாகனங்களை ஓட்டிக்கொண்டு போகிறோம். யாரோ கூலியாட்கள் கட்டிய வீட்டில் தான் நாம் வசதியாக வாழ்கிறோம். யாரோ நெய்த ஆடைகளைத்தான் நாம் கம்பீரமாக அணிந்து  கொள்கிறோம். யாரோ விளைவித்த தானியங்களைத்தான் சாப்பிடுகிறோம். சீப்பில் இருந்து செருப்பு வரை நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருட்களும் யாரோ செய்ததுதான்.

சமுதாயத்திலிருந்து இத்தனை விஷயஙளைப் பெற்றுக் கொள்ளும் நாம், சமுதாயத்துக்குப்பட்டிருக்கும் கடன்களை எப்படித் திருப்பி அடைக்கப் போகிறோம்? அதனால் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அடுத்தவர்களுக்குத் தாராளமாக உதவி செய்யுங்கள். நீங்கள் அடுத்தவருக்கு உதவி செய்தால், ஆண்டவண் உங்களுக்கு உதவி செய்வார்.

Monday, September 27, 2010

ஆடு கொடுத்த சாபம்


கிராமக் கோயில்களில் ஆடுகளைப் பலி கொடுக்கும் பழக்கம் இன்றும் உள்ளது. ஆட்டின் கழுத்தில் கயிறைக் கட்டி இழுத்துச் செல்வர். கூடவே ஒரு கையில் ஆடு தின்னத்தக்க தழைகளை அதற்கு காட்டிக்கொண்டே செல்வர். அந்த ஆட்டுக்கு தனக்கு உணவகவுள்ள அந்த தழைகளைத் தவிர, நிகழ இருக்கிற பயங்கரம் தெரியாது! கோயில் வரை கொண்டு சென்று அதை அங்கு பலியிட்டு விடுவர்.

இருபதாயிரம் ஆண்டுகளாக வாழ்வின் அனுபவத்தை பார்த்துவிட்டு மனிதகுலம்,ஒருவரை ஒருவர் அழிப்பதற்காக இன்றும் உலகில் போர்
 செய்கிறான். இளமையும், துடிப்பும் மிக்க இளைஞர்கள் பலரைக் கூட்டி, பணத்தையும், உணவையும் காட்டி ஒன்று திரட்டி, கொலைக்களமாகிய போர்க்களத்தில் நிறுத்தி பலி கொடுக்கிறான். மனிதக்குலத்தை பிடித்த இந்த சாபம் என்று விடியும்?

Sunday, September 26, 2010

உடலமைப்பும் மக்கள் பிரிவும்


சமூகம் என்பது பல தனிமனிதர்கள் கூடிவாழும் அமைப்பு. இதில் அவரவர் எண்ணம், நடத்தை, அறிவு, செயல்பாடுகள், பக்குவம் இவற்றிற்கேற்ப மேல் மக்கள், நடுத்தர மக்கள், கீழ்மக்கள் என்று மூன்று பிரிவுகளில் பிரித்துக் கொள்ளலாம். 

கை கால்களைத் தவிர்த்துள்ள நம் உடம்பை மூன்றாகப் பிரித்துப் பார்த்தால் தொப்புளுக்குக் கீழே கீழ்ப்பகுதி காமம், குரோதம், ஆசை, சந்தோசம், வலி, வேதனை முதலியவற்றுக்குச் சொந்தமான பகுதியாகக் கருதப்படுகிறது. எவருக்கெல்லாம் இதில் வரம்பு மீறிய ஆர்வமும் தொடர்பும் உண்டோ அவர்களைக் கீழ்மக்கள் எனக்கருதலாம். 

தொப்புளுக்கு மேலே தொண்டைப் பகுதி வரை நடுப்பகுதி. இங்குள்ள உறுப்புகள் ஒன்றுக்கொன்று உதவி செய்து சேர்ந்து செயல்படும் தன்மை கொண்டவை. நேர்மை, உண்மை, இரக்கம், திருப்தி முதலியவற்றுக்ச் சொந்தமான பகுதி. இக்குணங்களைப் பெற்றவர்கள் நடுத்தரமக்கள். 

தலைப் பகுதியை அன்பு, அறிவு, நிதானம், தவம், அமைதி, ஆனந்தம், பரமானந்தம் உள்ளிட்டனவற்றிற்க்குச் சொந்தமான பகுதியாகக் கருதலாம். யார் இவற்றில் ஈடுபாடும் ஆர்வமும் காட்டுகிறார்களோ அவர்களையெல்லாம் மேன்மக்கள் என்று கருதலாம்.

Saturday, September 25, 2010

உடம்பு, உயிர், மனம்


பொதுவாக மனிதன் என்ற சொல், மனம் என்ற அடிச்சொல்லைக் கொண்டே பிறந்தது.  மனதை உடையவன் மனத்தன்.  இந்த மனத்தன் என்றசொல் திரிந்து மனிதன் என்று ஆயிற்று.

மனம் என்பது என்ன? என்பது ரொம்ப நாள் ஆய்வில் இருக்கின்ற விஷயம். இது கண், இது கை, இது வாய் என்று ஒவ்வொரு உறுப்பையும் சுட்டிக்காட்டுவது போல் இது மனம் என்று சுட்டிகாட்ட என்ன இருக்கிறது?

மனம் என்பதற்கு இதுவர நேரிடையான பதிலை எவரும் சொல்லவில்லை. மனம் என்பது மூளையின் இயக்கம். மனம் எங்கே இருக்கிறது? மனம் நமது தலைக்குள்ளாகவா இருக்கிறது? ஆம் என்கிறார்கள் அறிஞர்கள். எப்படி இதயம் மார்பு கூட்டுக்குள்ளே இருபதை போல், மனம் தலைக்குள்ளாக இருக்கிறது.

மனம் ஒன்றை சிந்திக்கிறது. அதே மனம் அந்த சிந்தனை பற்றிய எச்சரிக்கையும் செய்கிறது. மனதுக்கு ஏன் இந்த குழப்பம். அதற்கு காரணம்: மனம் மூன்று நிலைகளில் இயங்குகிறது. இந்த மூன்று நிலையான இயக்கங்களிலும் மூளையின் மூன்று பகுதிகள் வேலை செய்கின்றன. அவை, மேல்மனம், நடுமனம், அடிமனம்(Concious mind, sub concious, unconcious --or-- ID, Ego, Super Ego) என்ற மூன்று பிரிவுகளாகும். தற்கால உளவியல் அறிஞர்கள் இந்த மேல், நடு, அடிமன செயல்பாடுகளோடு விளக்கங்களை முடித்துவிடுகின்றனர். இதோடு மனம் என்பதை அப்படியே விட்டுவிட்டு, மனதை மேம்படுத்தலாம், எண்ணங்களை உயர்த்திக் கொள்ளலாம், நல்ல எண்ணங்களை வளர்பதால், நன்மைகளை அடையலாம், மனதின் ஆபாரபலம், மறைந்திருக்கும் மனித சக்தி என்றெல்லாம் தாவி விடுகின்றார்கள்.  மனிதமனம் என்று எழுத வருகின்ற போது இம்மாதிரியான அலங்கார விஷயங்களே நூலை ஆக்கிரமித்துக் கொள்ளுகின்றன.

சில மேனாட்டு அறிஞர்கள் கூட மனத்தின் நிலைகளை பற்றிப் பெரிய ஆராய்ச்சிகள் செய்து எழுதி இருந்தாலும், அவர்களுடைய எழுத்தும்; மனோசக்தியால் நோய்களை தீர்த்துக்கொள்ளலாம், வளைந்த காலை நிமிர்த்தி கொள்ளலாம், காற்றில் பறக்கலாம், தண்ணீரில் நடக்கலாம் என்று திசைமாறிப் போய்விடுகிறது.

மற்றும் சிலர் மேல், நடு, அடிமனம் (Id, Ego, Super Ego) அது இது என சொல்லி மலைத்துகொண்டும், மலைப்பை உண்டாக்கிக் கொண்டும் எழுதிக்கொண்டும் போகிறார்களேயொழிய மனதை பற்றி ஒன்றும் விளங்கி கொள்ளுவது போல் எந்த எழுத்தும் இல்லை.

மூளை ஆராய்ச்சி நிபுணர்கள்; மனம் எனப்து மனித மூளையில் உள்ள பீனியல் சுரப்பியில் இருக்கிறது என்றும்; இல்லை, மூளையின் செரிப்ரம் என்ற பகுதிதான் மனம் என்றும்; அதுவும் இல்லை மூளையில் உள்ள லிம்பிக் சிஸ்டம்தான் என்றும், கிடையாது, ரெட்டிக்குலர் ஃபார்மேஷன் என்ற பகுதிதான் மனதின் ஜீவ நாடி என்றும் பல்வேறு வகையில் நாளுக்குநாள், மனதைப் பற்றிய ஆய்வுகளைத் தொடர்ந்து வெளிட்டுக் கொண்டு இருகிறார்கள்.

தற்போது விஞ்ஞானிகள் மனம் எனப்து மூளையின் இயக்கம்தான் என்று ஒரளவுக்கோ அல்லது உறுதியாகவோ ஒப்புகொண்டு இருப்பதோ அல்லது ஒப்புக் கொள்ள யோசிப்பதோ வரவேற்க வேண்டிய விஷயம்தான்.

இதற்குமேல் விஞ்ஞானிகள் மனதின் மூன்று நிலைகளோடு ஒவ்வொரு நிலையையும் மூளையின் எந்த பகுதியாக இயங்குகிறது என்பதைக் கண்டுபிடித்துச் சொல்ல வேண்டிய எதிர்காலப் பொறுப்புகளோடு இருக்கிறார்கள்.

இந்த நிலையில் யோகசாஸ்திரம் மனதைப் பற்றியும், மூளையைப் பற்றியும் சொல்லி முடித்துவிட்டு இருப்பதை விஞ்ஞானம் கவனித்தால அது அவர்களுக்கு பெரிய உதவியாய் இருக்கும். இந்த அடிப்படைச் செய்திகளை கொண்டு விஞ்ஞானம் தனது ஆராய்ச்சியை எளிதாக தொடர்வதோடு அரிய மிகபெரிய உண்மைகளை அது உலக்குக்கு தரும் என்பதில் ஐயமில்லை

மொத்தத்தில்; உடம்பு, உயிர், மனம் இவை மூன்றும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது. இந்த மூன்றில் எது தாக்கத்திற்கு ஆளானாலும் மற்ற இரண்டும் தாக்கத்திற்கு ஆளாகும். இது நமது உடம்பைப்பற்றிய மாறாத ஒரு அடிப்படை உண்மையாகும்.

இந்த அடிப்டை உண்மையின் பேரில் மானுட உடம்பு, உயிர், மனம் இவற்றை பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறொம்.

Wednesday, September 22, 2010

அகத்தவம்


 ”தியானம்” என்ற வடமொழிச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் “அகத்தவம்” ஆகும். உயிர் மீது மனதைச் செலுத்தி அமைதி நிலைக்கு வந்து அவ்வமைதியின் மூலம் சிந்தனையைச் சிறப்பித்து அறிவை வளப்படுத்தி வாழ்வில் நலம்காணும் ஒரு சிறந்த உளப்பயிற்சி தான் அகத்தவம் ஆகும். வாழ்க்கைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ள மக்கள் அனைவருக்கும் அகத்தவம் இன்றியமையாத்தேவையாகும். இதனை மாணவ பருவத்திலேயே தொடங்குவது சாலச் சிறந்தது. பிரபஞ்சம் எனும் பேரியக்க மண்டலத்தைக் களமாகக் கொண்டு உடல்,உயிர்,அறிவு என்ற மூன்றும் ஒன்றிணைந்து இயங்கும் ஒரு சிறப்பியக்க நிலையமே மனிதன். கருவமைப்பின் மூலம் வந்த முன்வினைப் பதிவுகளையும் அவற்றால் ஊக்குவிக்க்கப்பட்டு தற்போது நிகழும் பிறவியில் ஆற்றியுள்ள வினைப்பதிவுகளையும் அடக்கமாகப் பெற்று அவற்றின் வெளிப்பாடாகச் செயலாற்றி விளைவுகளைத் துய்த்து வாழும் உருவமே மனிதன்.

உலகிலுள்ள எல்லாத் தோற்றங்களிலும் எல்லா ஊயிர்களிலும் சிறந்த, மேலான ஒரு இயக்கநிலை மனித உருவம். எல்லாம் வல்ல இறைநிலையை முழுமையாக எடுத்துக்காட்டும்,பிரதிப்பலிக்கும் கண்ணாடி மனிதனே.-------------அருள்தந்தை

~~~~~~~~~~~~~~
தவம்
~~~~~~~~~~~~~~
த : தத்துவம். நான் யார்? என்ற தத்துவத்தை உணர்தல்.
  
வ : வடிவம். தன்னை யாரென்று உணர்ந்தபிறகு அதுவாகவே வடிவம் எடுக்க வேண்டும். இறைவனை அரூபமாக உணர்ந்தபின், தானும் அதுவே என உணர்தல். கண்டத்திற்கு மேல் கருத்தைச் செலுத்தும்போது, அண்டத்தில் உள்ளதே பிண்டத்திலும் உள்ளது என உணர்ந்து அதுவாகவே வடிவமெடுத்தல்.

ம் : பிரணவ ஒலி. எங்கும் எப்போதும் பிரணவமாகத் தோமற்றமளிக்கிறது.

Monday, September 20, 2010

யோகா
யோகா என்பது தலைகீழாக நிற்பதோ, பல கோணங்களில் உடலை வளைப்பதோ அல்ல. அது யோகாசனம். அது யோகாவில் ஒரு சிறு பகுதி. அவ்வளவு தான்!

யோகா என்றால், வித்தியாசங்களைக் களைந்து, மற்றதுடன் ஐக்கியமானது.

40 ஆயிரம் வருடங்களுக்கு மேலாகவே யோகப் பயிற்சி அளிக்கப்பட்டத்தற்கான சான்றுகள் நம்மிடம் இருக்கின்றன. 

சென்ற நூறு தலைமுறைகளில் நாகரீகங்களும், கலாச்சாரங்களும், மொழிகளும் எத்தனையோ விதமாகப் புரண்டு விட்டன. ஆனால் யோகா சற்றும் மதிப்பிழக்கவிலை. முறையான யோகா ஒரு விஞ்ஞானம். 

பல்பு எப்படி வேலை செய்கிறது என்பதைக் பள்ளிக்கூடத்தில் கற்றுக் கொள்ளாதவன் சுவிட்சை போட்டாலும் விளக்கு எரியும். 

யோகாவும் அதைப்போல்த்தான். கல்வியோ, கல்லாமையோ அதற்குப் பொருட்டல்ல. குறிப்பிட்ட கலாச்சாரத்திற்கோ, ஒரு மதத்திற்கோ அது அடிமை அல்ல. எந்த ஒரு குழுவையும் அது சார்ந்ததில்லை. எந்த தெய்வ நம்பிக்கையும் அதற்கு தேவையில்லை.

எதனுடனும் தன்னைப் பிணைத்துக் கொள்ளாத காரணத்தாலேயே யோகா தனி மகத்துவம் கொண்டிருக்கிறது. முறையான யோகா மிகச் சரியாகவே வேலை செய்யும்.

Sunday, September 19, 2010

பசி ஏன் ஏற்படுகிறது?


உடலியக்கதினால் தேவையற்ற அணுக்கள் செல்களில் இருந்து வெளியேறி, எப்போதும் உடலை விட்டு உதிர்த்து கொண்டே இருக்கின்றன, அதனால் உண்டாகும் காலியான இடத்தை நிரப்புவதற்கு ஒரு இழுவை சக்தி உற்பத்தியாகிறது. உடலில் ஏற்படக்கூடிய இழுவை சக்தி குடலில் வந்து தாக்கும்.  காரணம் என்னவென்றால் அங்கேயிருந்துதான் இதுவரைக்கும் ஆற்றல் எடுத்து பரவி வந்தது.  அதனால் எல்லா இழுவை சக்தியும் வயிற்றில் வந்து சேர்கிறது.  அந்த உணர்வே பசி என்பதாகும்.  பசி என்பது குறிப்பிட்ட காலத்தில் நிறைவு செய்ய வேண்டிய ஒன்று.  உணவுதான் காலியான இடத்தை நிரப்பி, எப்போதும் மனிதனை வளர்ச்சியில் வைத்துக் கொண்டிருக்கிறது.

உணவு இல்லையென்றால் இரண்டு வகையான துன்பங்கள் உண்டாகும். உணவு சீரணிப்பதற்கான இரைப்பையில் ஒரு அமிலம் அதன் பெயர் “ஹரிதகிகா அமிலம் (Hydrocloric Acid)" உற்பத்தியாகிக் கொண்டே இருக்கிறது.  அரிக்கக்கூடிய, எரிக்கக்கூடிய ஒர் ஆற்றல் உடைய அந்த அமிலம், காலத்தோடு உணவு வயிற்றுக்கு கிட்டவில்லையென்றால் குடலைக் கௌவி அரிக்கிறது.  அதனால் குடல் புண் உண்டாகிறது.  உடலில் உதிர்த்துவிட்ட அணுக்களுக்குப் பதிலாக மாற்று அணுக்கள் இல்லாததனால், வேலை செய்ய முடியாத அளவுக்கு பலகீனம், சோர்வு உண்டாகும். இந்நிலை தொடர்ந்து அதிகமானால் அதுவே ஒரு நோயாக ஆகிவிடுகிறது.

உணவு கிடைக்காத குறைப்பாட்டால் கண்களை இருளச் செய்து, காதுகளை அடைத்து, கருத்தைச் சோர செய்து, குடல்களை முறுக்கிப் பிழிந்து, உடலில் உள்ள நரம்புகள் அனைத்தையும் தளரச் செய்யும் கொடிய துன்பம் விளைவிக்கும் பட்டினியை யாரும் அனுபவிக்க கூடாது.

ஒரு செல்வந்தர் சாப்பிட்டு விட்டு, வீட்டு மாடியில் படுத்து உறங்கிக் கொண்டு இருக்கலாம். உறக்கமில்லாது புரண்டு கொண்டும் இருக்கலாம்.  அதே மாடியின் கீழ் பிளாட்பாரத்தில் பசியோடு ஒரு ஏழை வருந்திக் கொண்டிருக்கலாம்.  இவனுக்கும், அவருக்கும் என்ன தொடர்பு என்று மேலோட்டமாகப் பார்த்தால் தெரியாது.  இவனுடைய பசியின் வேகத்தில், ”அவர் நன்றாக சாப்பிட்டு விட்டுத் தூங்குகிறார், நான் பசியோடு இருக்கிறேனே” என்று எண்ணுவான்.  பசியோடு இருக்கக்கூடிய இவனுடைய எண்ணம், வருத்தம் எல்லாம் எங்கே நாடி வரும் என்றால், உண்டு களித்து இருக்கக் கூடியவர்களைதான் நாடும்.

அந்த ஏழையின் எண்ண அலைகளின் ஆற்றல் எவ்வளவு? எண்ணமே இறைவனின் பிரதிபலிப்பு; இறைவனின் படர்கைநிலை.  பேராற்றலுடையது எண்ண அலை. அந்த எண்ண அலையின் தாக்குதலால் பணக்காரர் சாப்பிட்டு விட்டு படுத்தார்; தூங்க முடியாது புரள்கிறார்.  இப்போது ஏழ்மை பணக்காரரைத் தாக்கிவிட்டது.  ஏழ்மை எல்லோருக்கும் சொந்தமாகி விடுகிறது.

ஒவ்வொரு மனிதனும் சமுதாயத்தின் சொத்து.  நாம் ஏதோ ஒவ்வொருவரும் தனியாக இருக்கிறோம் என்று நினைக்கிறோம்.  அது கற்பனை, அறியாமை என்று கூட சொல்லலாம்.  உடலால், உயிரால், அறிவால் சமுதாயத்தில் உள்ள மக்களோடு ஒவ்வொரு மனிதனும் பின்னிக் கொண்டு இருக்கிறோம்.  பொருளளவில் ஏழை பணகாரன் என்று இருக்கலாம். ஆனால் ஏழையின் பசிக் கொடுமையின் விளைவு எல்லோரையும் நிரவி வருகிறது.

பசிக்கு முறைப்படி காலத்தோடு உணவு கொள்ளவில்லையென்றால் எந்தப் பணியைச் செய்ய முடியும்? காலத்தோடும் முறையோடும் தேவைக்கேற்ப கிட்டாதபோது மனிதனின் அறிவு, உடல் ஆற்றல்கள் திசைமாற்றம் பெறுகின்றன; போட்டியுணர்வும் பாதுகாப்புப் பொறுப்பும் மிகுதியாகின்றன.  அச்சம், பகை, பிணக்கு, போர் இவையாக உருப் பெறுகின்றன.

Friday, September 17, 2010

மனநிறைவு


பிறரிடம் குறைபாட்டையே எடுத்து அலசிப் பார்ப்பதை விடுத்து குறைவில்லாது நிறைவையே பார்க்கப் பயிற்சி கொடுத்க் கொள்ள வேண்டும். எல்லாம் வல்ல இறைவன் அருளால் அமைந்தது எத்தனை எத்தனையோ ஆயிரம் ஆயிரம் நலன்கள். இதையெல்லாம் எண்ணி எண்ணி மகிழலாமே! ஏதேனும் ஒரு குறைபாட்டை நாமாக கற்பித்துக் கொண்டு அது இல்லையே என்று துன்பப்படுவதை விட்டுவிட வேண்டும்.

இந்த முறையில் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளிலும், ஒவ்வொரு நிமிடமும் இந்தக் குறைபாடு களைந்து நிறைவை ஏற்படுத்திக் கொண்டு மனநிறைவாக வாழ்வதற்கு இறை உணர்வும், உயிர் உணர்வும் வேண்டும். அந்த உயிர் உணர்வைப் பெறுவதற்கு தவம் இருக்கிறது. அற உணர்வை பெறுவதற்கு நல்ல செயல்கள் செய்யச் செய்ய தானாகவே அது மலர்ந்துவிடும். அந்த முறையில் எப்பொழுதும் யாருக்கு என்ன நன்மை செய்யலாம் என்று அதைச் செய்யத் தயாராகும் முறையில் நீங்கள் வந்துவிட்டீர்களானால், அதுவே தான் எல்லாம் வல்ல இறைவனுக்குச் செய்ய வேண்டிய தொண்டு.

நேரடியாக நீங்கள் இறைவனுக்குச் செய்ய வேண்டும் என்றால் இறைவன் ஒவ்வொரு உள்ளத்திலும் இருந்து கொண்டு எங்கு தேவையோ அதை அங்கு போய் உதவி செய்து முடிக்கிற அளவுக்கு உதவி செய்ய வேண்டும். வாழ்க்கையில் மனநிறைவும் மகிழ்ச்சியும் பெருவதற்கு இதற்கு ஈடான மார்க்கம் பிறிதொன்றும் இல்லை. 

Tuesday, September 14, 2010

நாம் நினைப்பது எப்படி நடக்கிறது?


விழிப்பு நிலையிலேயே இருக்கப் பழகிக் கொண்டோமானால், மற்றவர்களுடைய எண்ண அலைகள் தீமை விளைவிப்பவனவாக இருந்தாலும், உணர்ச்சிக்கு ஊக்கம் கொடுப்பவையாக இருச்ச்ந்தாலும்,  அவை நம்மைப் பாதிக்காது. உதாரணமாக நான்கு வானொலி நிலையங்கள் நான்கு விதமான வேறுபட்ட நிகழ்சிகளை ஒரே நேரத்தில் ஒலிப்பரப்புகின்றன.  நம் ரேடியோவை எந்த அலை நீளத்தில் வைக்கிறோமோ அது மாத்திரம் தான் இங்கே கேட்கும். மற்றவை எல்லாம் வந்து மோதும்; ஆனால் கேட்காது. அதுபோலவே, தேவையற்ற அலைக்கழிப்பும் பாதிப்பும் இல்லாமல் விட்டு விலகி எந்த நிலையில் இருக்கிறோமோ அந்த நிலைக்கு ஏற்ப நமக்கு என்ன தேவையோ அது கிடைக்கும். நாம் என்ன செய்ய முடியும் என்ற அளவிலே மனிதத் திறமை வெளிப்படுகிறது. இந்த மனிதத்திறமை அதிகரிக்க அதிகரிக்க என்ன ஆகும்? நாம் எங்கு போனாலும், நமக்காக மற்றவர் தாமாகவே அந்த அலையிலேயே கட்டுப்பட்டு, நம் மதிப்பை உணர்ந்து புரிந்து கொள்ள அவர்களுக்கு எண்ணம் தோன்றும்: எங்கே போனாலும் நம்க்கு வெற்றியாகவே இருக்கும்.


அப்படி எங்கேயாவது வெற்றி இல்லாமல் தடை ஏற்பட்டாலும் அந்த தடையினால் நமக்குக் கெடுதல் இல்லை. “நம்மை திருப்பி விடுவதற்காக இந்த அலை நீளத்தில் தேவையில்லாதவற்றைத் தள்ளி விடுகிறது. அதனால் அந்த வேலை நடக்கவில்லை, “என்று எண்ணி அமைதி அடைந்தால், எந்த காலத்தில் எந்தச்சூழ்நிலையில் அந்த வேலை நடக்க வேண்டுமோ அதுதானாகவே நடந்துவிடும்.

முற்றறிவு (Total Consciousness) என்று சொல்லக்கூடிய பிரபஞ்சம் முழுவதும் நிறைந்திருக்கக் கூடிய இதே அறிவு தான் எங்கேயும் இருக்கிறது. அது தொகுப்பறிவு (Collective Knowledge).அதனால், அந்த இடத்திருந்து நாம் எண்ணி எண்ணத்திற்க்குரிய காலமும் வேகமும் வரும் போது அது தானாகவே மலர்ந்து செயலாகிறது.

Wednesday, September 1, 2010

எண்ணம், சொல், செயல்


மனிதனிடம், மனமாக, பார்வையாக, சொல்லாக அல்லது எண்ணமாக வெளியேறும் அலை எந்த வகையாக இருப்பினும் அவ்வலை அவனுடைய தன்மைகள் அனைத்தையும் எடுத்துச் செல்கின்றது. ஒவ்வொரு மனிதனும் முன் அனுபவத்தினால் எற்பட்ட பதிவுகளின் மூலம் செயல் படுவதினால் அவனுடைய எண்ணம், சொல், செயல் அனத்தும் அவனுடைய பதிவின் அடிப்படையில் அமைந்து இருக்கும். அவனுடைய தன்மைகள் யாவும் அலை மூலமாக வெளிப்படுகின்றது.

ஒவ்வொரு மனிதனும் தன்க்குள் நல்ல பதிவுகளையும், தீய பதிவுகளையும் பெற்று இருக்கின்றான். ஆகவே மனதின் நிலைமைக்கேற்ப அவனிடம் இருந்து வரும் எண்ணம் சில நேரங்களில் நேர்மையானதாகவும், சில நேரங்களில் முரண்பாடு உடையதாகவும் இருக்கின்றன. இங்கு நேர்மையான அல்லது முரண்பாடான எண்ணம் அது சென்று அடையக்கூடிய பொருள் அல்லது மனிதனை பொறுத்து அமைவது இல்லை. அவை யாரிடம் இருந்து செல்கின்றனவோ அவர்களுடைய தன்மையை பொறுத்து அமைகின்றன. இந்த விஞ்ஞானத்தை, தத்துவத்தை அறிந்து கொள்ளாமல் நாம் எண்ணற்ற பதிவுகளை ஏற்படுத்திக் கொண்டு அவற்றை நன்றாக வேருன்ற செய்து கொண்டோம். தேவையற்ற தீய பதிவுகளை நாம் ஊக்குவிக்கும் பொழுது அது மேலும் ஆழமாக பதிந்து நம் குணங்களை தீய பதிவுகள் கட்டு படுத்துமாறு ஆகிவிடுகின்றன. நேர்மையற்ற முரண்பாடான எண்ணங்களை மாற்றி தீய பதிவுகளை களைவது சிறந்த ஆன்மீக முயற்சியாகும். தூய எண்ணம், சொல், செயல்களினால் இனிமையான நல்ல அலைகள் ஏற்படுத்தும் பயிற்சியினை மேற்கொள்ள வேண்டும். ஒருவரை வாழ்த்துவதினால் ஏற்படும் நற்பயனை நாம் இங்கு தான் உணரமுடியும்.பி.கு: இது லதா படிக்கும் முதுகலை பட்டய படிப்பு “யோகாவும், மனித மாண்பும்” என்ற புத்தகத்தில் இருந்து தொல்லைபேசி வழியாக அவர் சொல்ல நான் ரைப் பண்ணது :))) கீழே இருக்கும் படத்திற்கும் பி,குக்கும் சம்பந்தம் இல்லை :)))