Sunday, September 19, 2010

பசி ஏன் ஏற்படுகிறது?


உடலியக்கதினால் தேவையற்ற அணுக்கள் செல்களில் இருந்து வெளியேறி, எப்போதும் உடலை விட்டு உதிர்த்து கொண்டே இருக்கின்றன, அதனால் உண்டாகும் காலியான இடத்தை நிரப்புவதற்கு ஒரு இழுவை சக்தி உற்பத்தியாகிறது. உடலில் ஏற்படக்கூடிய இழுவை சக்தி குடலில் வந்து தாக்கும்.  காரணம் என்னவென்றால் அங்கேயிருந்துதான் இதுவரைக்கும் ஆற்றல் எடுத்து பரவி வந்தது.  அதனால் எல்லா இழுவை சக்தியும் வயிற்றில் வந்து சேர்கிறது.  அந்த உணர்வே பசி என்பதாகும்.  பசி என்பது குறிப்பிட்ட காலத்தில் நிறைவு செய்ய வேண்டிய ஒன்று.  உணவுதான் காலியான இடத்தை நிரப்பி, எப்போதும் மனிதனை வளர்ச்சியில் வைத்துக் கொண்டிருக்கிறது.

உணவு இல்லையென்றால் இரண்டு வகையான துன்பங்கள் உண்டாகும். உணவு சீரணிப்பதற்கான இரைப்பையில் ஒரு அமிலம் அதன் பெயர் “ஹரிதகிகா அமிலம் (Hydrocloric Acid)" உற்பத்தியாகிக் கொண்டே இருக்கிறது.  அரிக்கக்கூடிய, எரிக்கக்கூடிய ஒர் ஆற்றல் உடைய அந்த அமிலம், காலத்தோடு உணவு வயிற்றுக்கு கிட்டவில்லையென்றால் குடலைக் கௌவி அரிக்கிறது.  அதனால் குடல் புண் உண்டாகிறது.  உடலில் உதிர்த்துவிட்ட அணுக்களுக்குப் பதிலாக மாற்று அணுக்கள் இல்லாததனால், வேலை செய்ய முடியாத அளவுக்கு பலகீனம், சோர்வு உண்டாகும். இந்நிலை தொடர்ந்து அதிகமானால் அதுவே ஒரு நோயாக ஆகிவிடுகிறது.

உணவு கிடைக்காத குறைப்பாட்டால் கண்களை இருளச் செய்து, காதுகளை அடைத்து, கருத்தைச் சோர செய்து, குடல்களை முறுக்கிப் பிழிந்து, உடலில் உள்ள நரம்புகள் அனைத்தையும் தளரச் செய்யும் கொடிய துன்பம் விளைவிக்கும் பட்டினியை யாரும் அனுபவிக்க கூடாது.

ஒரு செல்வந்தர் சாப்பிட்டு விட்டு, வீட்டு மாடியில் படுத்து உறங்கிக் கொண்டு இருக்கலாம். உறக்கமில்லாது புரண்டு கொண்டும் இருக்கலாம்.  அதே மாடியின் கீழ் பிளாட்பாரத்தில் பசியோடு ஒரு ஏழை வருந்திக் கொண்டிருக்கலாம்.  இவனுக்கும், அவருக்கும் என்ன தொடர்பு என்று மேலோட்டமாகப் பார்த்தால் தெரியாது.  இவனுடைய பசியின் வேகத்தில், ”அவர் நன்றாக சாப்பிட்டு விட்டுத் தூங்குகிறார், நான் பசியோடு இருக்கிறேனே” என்று எண்ணுவான்.  பசியோடு இருக்கக்கூடிய இவனுடைய எண்ணம், வருத்தம் எல்லாம் எங்கே நாடி வரும் என்றால், உண்டு களித்து இருக்கக் கூடியவர்களைதான் நாடும்.

அந்த ஏழையின் எண்ண அலைகளின் ஆற்றல் எவ்வளவு? எண்ணமே இறைவனின் பிரதிபலிப்பு; இறைவனின் படர்கைநிலை.  பேராற்றலுடையது எண்ண அலை. அந்த எண்ண அலையின் தாக்குதலால் பணக்காரர் சாப்பிட்டு விட்டு படுத்தார்; தூங்க முடியாது புரள்கிறார்.  இப்போது ஏழ்மை பணக்காரரைத் தாக்கிவிட்டது.  ஏழ்மை எல்லோருக்கும் சொந்தமாகி விடுகிறது.

ஒவ்வொரு மனிதனும் சமுதாயத்தின் சொத்து.  நாம் ஏதோ ஒவ்வொருவரும் தனியாக இருக்கிறோம் என்று நினைக்கிறோம்.  அது கற்பனை, அறியாமை என்று கூட சொல்லலாம்.  உடலால், உயிரால், அறிவால் சமுதாயத்தில் உள்ள மக்களோடு ஒவ்வொரு மனிதனும் பின்னிக் கொண்டு இருக்கிறோம்.  பொருளளவில் ஏழை பணகாரன் என்று இருக்கலாம். ஆனால் ஏழையின் பசிக் கொடுமையின் விளைவு எல்லோரையும் நிரவி வருகிறது.

பசிக்கு முறைப்படி காலத்தோடு உணவு கொள்ளவில்லையென்றால் எந்தப் பணியைச் செய்ய முடியும்? காலத்தோடும் முறையோடும் தேவைக்கேற்ப கிட்டாதபோது மனிதனின் அறிவு, உடல் ஆற்றல்கள் திசைமாற்றம் பெறுகின்றன; போட்டியுணர்வும் பாதுகாப்புப் பொறுப்பும் மிகுதியாகின்றன.  அச்சம், பகை, பிணக்கு, போர் இவையாக உருப் பெறுகின்றன.

2 comments:

  1. பசியைப் பற்றிய பதிவுக்கு கருத்துப்பகிர்வு செய்ய வந்தபோது ஊரில் இப்படி வாடிய எம் உறவுகளின் தோற்றம் மனக்கண்ணில் வந்து போனது.

    நான் இங்கு வந்தபின் எத்தனை ஆயிரம் உறவுகள் இந்த பசியின் கோரத்தாண்டவத்தில் சிக்குண்டு கிடப்பதை இன்றும் அறிகிறேன்.

    பசியினால் ஏற்படும் அவர்களின் எண்ண அலைகளின் ஆற்றல் மிகவும் உக்கிரமானது என உங்கள் பதிவில் வாசிக்கும்போது திகைப்பாக இருக்கிறது.

    அப்படி என்றால் அங்கு... இன்னும்...................சிந்திக்க பயமாக இருக்கிறது.

    பதிவிற்கு நன்றி.

    வாழ்க வளமுடன்!

    ReplyDelete
  2. அன்பு சகோதரி இளமதி இது ஒரு தொடர் முடிந்தவரை சீக்கிரம் முடிக்க பார்க்கிறேன். தங்களின் வரவுக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி.

    வாழ்க வளமுடன்

    ReplyDelete