Sunday, November 28, 2010
அறுசுவை
சுவைகளில் ஆறுவகை சொல்லப்படுகின்றன. அவை துவர்ப்பு, கைப்பு, கார்ப்பு, புளிப்பு, இனிப்பு, கசப்பு என்பனவாகும். சுவை என்பது ஒன்றே. எனினும் உடலில் காந்த சக்தி சுவையாக மாறி எழுச்சி பெற்று இயங்கும்போது, அதனுடைய செலவாகும் அளவையும், பரிணாமத்தையும் பொறுத்து அதை ஆறு பிரிவுகளாக பகுத்துக் காண்கிறோம்.
முதலில், ஒர் அணுவில் ஐந்து மாத்திரை அளவான காந்த சக்தி சுவையாக எழுச்சி பெற்று இயங்குகின்றது எனக் கொள்வோம். அது முதன் முதலில் துவர்ப்பு என்னும் நிலையில் இருக்கிறது. அதுவும் ஒன்று முதல் ஐந்து வரை சுவையாகச் செலவாகும் சக்தியின் அளவுக்கேற்ப துவர்ப்பு சுவையிலேயே, அளவில் பல வித்தியாசம் உண்டாகிறது.
அதற்கு மேல் ஆறு முதல் பத்து மாத்திரை வரையில் காந்த சக்தி சுவையாக எழுச்சி பெற்றால், அது கைப்பு என்னும் சுவையாக மாறுகின்றது. இவ்விதம் ஐந்தைந்து மாத்திரை அளவு சக்தி அதிகமாக செயல்பட, அது மேலும் முறையே கார்ப்பு, புளிப்பு, இனிப்பு, கசப்பு என்பனவாக எழுச்சி பெறுகின்றன. ஆகவே ஆறு சுவைகள் என்பது காந்த சக்தியின் ஏற்றத்தாழ்வு நிலைகளே அன்றி ஒவ்வொன்றும் தனித் தனியானது அல்ல.
உடலில் உடல் அமைப்பில் ஆறு சுவையும் இருக்கின்றன. கூடுதல் குறைவாக இருக்கலாம். ஆனால் ஆறு சுவையும் இருக்கின்றன. உடலின் ஒவ்வொரு பகுதியில் ஒவ்வொரு சுவை அதிகமாக இருக்கலாம். தேள் கொட்டினால் தேளின் விஷமாகிய ரசாயனம் உடல் முழுவது கைப்புச் சுவையாக அதிகரித்து விடுகிறது. அதனால் உடலின் அணு அடுக்கில் குழப்பம் மிகுதிப்பட்டு உடலுக்கும் உயிருக்கும் பொருந்தாமை ஏற்பட்டு விடுகிறது. அதே போல் பாம்புக் கடியினால் உடலில் கார்ப்பு சுவை அதிகரித்து விடுகிறது.
சுவையின் அளவு அதிகரிக்குங்கால், ஒன்று மற்றொன்றாகவும் அதில் முன்னிலையும் பின்னிலைக்குரிய மௌன எழுச்சியும் அடக்கம் பெற்றே இருக்கிறது. ஆகவே எந்த ஒரு சுவையிலும் ஆறுவைக அடங்கியும், அவற்றில் அதிகமாக மீறி நிற்பதே புலனுணர்ச்சிக்கு உணர்வாகவும் இருக்கிறது
Saturday, November 20, 2010
ரமணரின் கர்மயோகம்
அதை விளக்குவதை விட, உணர்த்துவதே மேல் என அவர் எதையும் சொல்லவில்லை. நடந்து வரும் வழியில் ஒரு கருவேலமரத்தின் முட் கிளை கீழே விழுந்து கிடந்தது. ரமணர் அதை எடுத்தார். முட்களைச் சீவினார். அதை வழுவழுவென மென்மையாக்கிவிட்டார். அதைக் கையில் பிடித்தபடி மெதுவாக நடந்தார். வழியில் ஆடு மேய்க்கும் சிறுவன் ஒருவனைக் கண்டார். அவன் தன் கையிலிருந்த கம்பை அங்குள்ள பள்ளத்தாக்கில் தவற விட்டு கவலையோடிருந்தான். இதை அறிந்த ரமணர் தனது கையிலிருந்த கம்பை அவனிடம் தந்தார். அவன் மகிழ்ச்சியோடு ஆடுகளை ஓட்டிச் சென்றான்.
இதுதான்,
கடமையைச் செய்
பலனை எதிர்பாரதே என்பது.
நாம் ஒவ்வொருவரும்,
நம்மால் என்னென்ன செய்ய முடியுமோ
எந்த அளவுக்குச் செய்ய முடியுமோ
எவ்வளவு பேருக்கு பலன் கொடுக்க முடியோமோ
அதையெல்லாம் செய்து வாழ்வதுதான்
நிறைவான வாழ்க்கை.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அமைதியின் விளைவு தியானம்
தியானத்தின் விளைவு நம்பிக்கை
நம்பிக்கையின் விளைவு அன்பு
அன்பின் விளைவு சேவை
சேவையின் விளைவு மன அமைதி. -அன்னை தெரசா.
Friday, November 19, 2010
அன்பே கடவுள்
கடவுள் அன்பே வடிவானவர். அவர் எல்லாவற்றிலும் மறைந்திருக்கிறார். ஆனால் ஒவ்வொன்றிலும் தெளிவாகப் பார்க்கக் கூடியவராகவும் இருக்கிறார். நாம் தெரிந்தோ தெரியாமலோ அவரிடம் இழுக்கப்படுகிறோம். ஒரு பெண் தன் கணவனிடம் அன்பு செலுத்தினால் அவனிடமுள்ள கடவுளாகிய மகத்தான இழுப்பாற்றலே அவளை அன்பு செலுத்தத் தூண்டுகிறது. நாம் வழிபட வேண்டியது கடவுளாகிய இந்த அன்பு ஒன்றையே.
நாம் அவரை இந்த உலகைப் படைத்தவராகவும், காப்பவராகவும் நினைத்துக் கொண்டிருக்கும் வரையில் புறவழிப்பாட்டை மட்டுமே செய்ய முடியும். ஆனால் அவற்றை எல்லாம் கடந்து சென்று, அவரை அன்பின் உருவாகாக் கொண்டு எல்லாவற்றிலும் அவரையும், அவரில் எல்லாவற்றையும் காணுவதே பக்தி.
அன்பின் வகைகள்
அன்பில் பல வகை உண்டு. இடம் மாறி செலுத்தப்பட்ட அன்பே துயரங்களுக்குக் காரணம். அன்பில்லாமல் எந்த உருவாக்கமும் இல்லை. நமது பிறப்பும் கூட அன்பைச் சார்ந்ததே.
அன்பில் 12 வகைகள் உண்டு.
1.இரக்கம் - எளியவர் மேல் காட்டுகிற அன்பு.
2.கருணை - அறிவு பலமும், உடல் பலமும் இல்லாத மனிதர்கள் மீது காட்டப்படுகிற அன்பு.
3.ஜீவகாருண்யம்- எல்லா உயிர்களிடத்திடமும் அன்பு.
4.பந்தம் - உறவினர்களிடத்து நாம் செலுத்தும் அன்பு.
5.பட்சம் - முதலாளி, வேலைக்காரரிடம் செலுத்தும் அன்பு.
6.விசுவாசம் - வேலை செய்பவர் தன் முதலாளியிடம் செலுத்தும் அன்பு.
7.பாசம் - தாய், குழந்தைகளுக்கிடையே உள்ள அன்பு.
8.நேசம் - தன்னையொத்த நண்பர்களிடையே நிலவும் அன்பு.
9.காதல் - கணவன், மனைவிக்கிடையே உள்ள அன்பு.
10.பக்தி - கடவுள் மேல் பக்தன் செலுத்தும் அன்பு.
11.அருள் -பக்தன் மேல் கடவுள் செலுத்தும் அன்பு.
12.அபிமானம் - ஒரு தேசம் அல்லது சமுதாயத்தின் மீது செலுத்தப்படுகிற அன்பு.
அன்பை நிலை மாறிச் செலுத்தினால் சிக்கல், துயரம், நிலை உணர்ந்து செலுத்தப்படும் அன்பு நன்மை தரும்.
Subscribe to:
Posts (Atom)